Monday, June 7, 2010

தமிழ்த்தேசியத்தின் பெயரால்

இன்றைய நிலையில் புலம்பெயர் தேசத்தின் சூடான செய்தி எழுத்தாளர் ரமேஷ் சிவரூபனின் கொலை ஆகும்.
தமிழர்களாலேயே பிரான்ஸில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகளின் செயலே இந்தக் கொலையாகும். தமிழ்த்தேசியத்தின் பெயராலும்,தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயராலும்,மாவீரர்களின் பெயராலும் என்று சொல்லிக்கொண்டே உள்ளிருந்து கொல்லும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் தமிழ்தேசியம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தமிழின விரோத செயற்பாட்டிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்தேசியத்துக்காய் உண்மையாக உழைப்பவர்களை தமக்கு சார்பான ஊடகங்கள்,இணையங்கள் மூலம் அச்சுறத்தல் விடுப்பதும்,அவற்றை மூடச்செய்வதுடன் தமது தில்லு முல்லுகளை மறைத்து மக்களை ஒரு மந்தைகள் போல மேய்க்க முற்படுகிறார்கள் மே18 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குபின்னர் தமது குட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்
உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவதோடு மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யும் அளவுக்கும் துணிந்து விட்டார்கள் என்பதற்கு ரமேஷ் சிவரூபன் அவர்களின் கொலை சாட்சியமாகும்.

இத்தனை காலமுமாய் புலிகளைக் காரணம் காட்டி பிழைப்பு நடத்தி வந்தவர்களுக்கு புலிகளின் தோல்வி அவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டது. புலிகளின் தியாகத்தில் குளிர்காய்ந்த இவர்களால் இன்னும் புலிகளைச் சாட்டி எஞ்சி இருக்கும் சொத்துக்களுக்கான சண்டைகளே இன்று புலத்தில் தமிழ்த்தேசிய வியாபாரிகளால் மேற்கொள்ளப் படுகிறது. தமிழ்மக்களின் விடிவுக்காய் எடுக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உதாரணமாக நாடுகடந்த தமிழீழ அரசாகட்டும். எதுவாக இருந்தாலும் முட்டுக்கட்டை போடுபவர்கள் இந்த தமிழ்த் தேசிய வியாபாரிகளே.

தமக்கு ஆதரவாக சிலபேரையும்,சில இணையங்களையும் கைக்குள் வைத்துக் கொண்டு உண்மையை உரைப்போர்களை துரோகிகள் என பட்டியல் இடுவதன் மூலம் உண்மைகள் வெளிவராத வண்ணம் தடுக்கிறார்கள். காற்று நிறைந்த பந்தை தண்ணீருக்குள் எவ்வளவு தான் அழுத்தினாலும் அது மேலே வரும் அதே போல தான் உண்மையும். எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தாலும் என்றோ ஒரு நாள் உண்மைகள் வெளிவரும்.

அன்பான புலம்பெயர் மக்களே இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த போலிகளிடம் ஏமாறப்போகிறோம்?? இன்னும் எத்தனை சிவரூபன்களைப் பலி கொடுக்கப் போகிறோம்?? தேசியத்தின் பெயரையும்,மாவீரர்கள் பெயரையும்,தேசியத்தலைவர் பெயரையும் கூறி ஏமாற்றும் கோடரிக்காம்புகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் தமிழர்களிடையே ஒற்றுமையும்,விடிவும் என்றைக்குமே ஏற்படாது.
காலத்தின் தேவை இது எனவே சிந்தித்து செயற்படுவோம்.

jk29740@gmail.com

No comments:

Post a Comment